திங்கள், 12 நவம்பர், 2012

குர்ஆன் தொகுப்பில் நபித்தோழர்கள் ஆற்றிய அரும்பணி

ஸைத் பின் ஃதாபித் (ரழி) அறிவிக்கின்றார்கள்:  (ஹதீஸ் சுருக்கப்பட்டுள்ளது)

 ...(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்'' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது.

 நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்'' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன்... (புகாரி: 4986)

புகாரியில் இடம்பெற்றுள்ள மேற்கண்ட நபிமொழி அல்லாஹ்வின் வேதத்தை எழுத்து வடிவில் தொகுக்க நபித்தோழர்கள் செய்த அரும்பணியை விளக்குகிறது.
 
இன்னும் பின் வரும் செய்தியையும் பாருங்கள்:
 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
(மூன்றாவது கலீஃபா) உஸ்மான்(ரலி) (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா(ரலி) வசமிருந்த குர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து), ஸைத் இப்னு ஸாபித், ஸயீத் இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர்களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களைத் தவிர இருந்த குறை»யரான மற்ற மூவரிடமும்), 'நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஓர் அரபி மொழி (எழுத்திலக்கணம்) விஷயத்தில் கருத்து வேறுபட்டால், குறைஷியரின் மொழி வழக்கிலேயே அதைப் பதிவு செய்யுங்கள்! ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்கில்தான் அருளப்பெற்றது'' என்று கூறினார்கள். அம்மூவரும் அவ்வாறே செய்தனர். (புகாரி: 4984)
மேற்கண்ட செய்தியைப் பாருங்கள். குர்ஆனை எழுத்து வடிவில் தொகுப்பதற்கு குர்ஆனில் கைதேர்ந்த ஒரு அறிஞர் குழுவையை ஏற்படுத்துகிறார்கள் உஸ்மான் (ரழி). பின்னர் ஏதேனும் எழுத்து அல்லது மொழி வழக்கில் கருத்து வேறுபட்டால் குறைஷியரின் மொழி வழக்கில் அதை எழுதுங்கள் என்று பணிக்கிறார்கள். அவர்களும் அவ்வாறு செய்தார்கள்.  அத்துடன் அவர்களால் தொகுக்கப்பட்ட குர்ஆனின் எழுத்துப் பிரதிகள் ஒட்டு மொத்த ஸஹாபாக்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.  எந்த ஒரு நபித்தோழரும் இன்ன இன்ன எழுத்தில் பிழை உள்ளது என்று சுட்டிக்காட்டவில்லை.  குர்ஆனுடைய விஷயத்தில் நம்மை விடவும் மிகுந்த அக்கறை கொண்டது நபித்தோழர்கள் சமுதாயம் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லை. அப்படியிருக்க குர்ஆனில் கவனக்குறைவாக பிழை ஏற்பட்டது என்றும் அதை நபித்தோழர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்றும் வாதிடுவது ஏற்புடையதா?
இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்.. எழுத்துப் பிழையையும் எழுத்து முறையையும் பிரித்தறிய இயலாத அறியாமை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.