ஞாயிறு, 26 டிசம்பர், 2010

மன்ஹஜ் ஸலஃபும் தவறான புரிதல்களும்!

ஈமான்கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி(நடப்பீர்களா)னால் அவன் உங்களுக்குப் பகுத்தறியும் ஆற்றலை வழங்குவான். உங்கள் தவறுகளை உங்களிடமிருந்து அகற்றி, உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையோன். (அல்குர்ஆன் 8:29) 

மன்ஹஜ் என்றால் வழிமுறை, பாதை, பாடத்திட்டம், நடைமுறை, அணுகுமுறை என்றெல்லாம் அகராதிப் பொருள் ஆகும். (அல் மவ்ரித்) ஸலஃப் என்றால் முந்திச் சென்றவர்கள், முன்னோர்கள் என்பது பொருளாகும். மன்ஹஜ் ஸலஃப் என்றால் முந்தியவர்களின் வழிமுறை என்பதாகும். யார் இந்த முந்தியவர்கள்? குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றும் உலமாக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த ஸஹாபாக்கள் அவர்களை அடுத்து வந்த தாபிஈன்கள்தபவுத் தாபியீன்கள் என்று மூன்று சிறந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த நன்மக்கள்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர்  ஒரு கூட்டம்  ஷியாக்களாக, கவாரிஜ்களாக, முஃதஸிலாக்களாகப் பிரிந்து புதிய கொள்கைகளை உருவாக்கி  குர்ஆனுக்குத் தான்தோன்றித் தனமான விளக்கங்களை அளித்து வழிகெட்டுச் சென்ற போது நபி வழியையும் நபித்தோழர்களின் வழியையும் பின்பற்றக் கூடியவர்கள் அவர்களிடமிருந்து தங்களைப் பிரித்து அடையாளம் காட்டுவதற்காக அஹ்லுஸ்சுன்னத் வல்ஜமாஅத் என்று பெயரிட்டுக்கொண்டார்கள். 73 கூட்டமாக இந்த சமூகம் பிரிந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்த போது நானும் எனது தோழர்களும் எந்த வழியில் இருக்கிறோமோ அந்த வழியைப் பின்பற்றக் கூடியவர்களே வெற்றி பெறுவர் என்ற ஹதீஸின் அடிப்படையில் அவ்வாறு பெயரிட்டுக் கொண்டனர். அதே கொள்கையை உடையவர்கள் தான் தங்களை ஸலஃப் மன்ஹஜை உடையவர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இன்று அஹ்லுஸ்சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டே ஷியாக்களின் பல செயல்பாடுகளையும் கடைபிடிக்கக் கூடியவர்கள் ஷிர்க்கான் பித்அத்தான காரியங்களில் ஈடு பட்டிருக்கும் நிலையில் அந்த பழய பரிசுத்தமான வழிமுறையைப் பின்பற்றி சீர்திருத்தம் செய்த நன்மக்கள் நபி (ஸல்) அவர்களால் பரிசுத்த தலைமுறை என நற்சான்று வழங்கப்பட்ட முந்தைய மூன்று தலைமுறையினர் எவ்வழியில் நடந்தார்களோ அவ்வழி நடப்பவர்கள் என்று தங்களை அடையாளப் படுத்துவதற்காக அஹ்லுஸ்சுன்னத் வல்ஜமாஅத் என்பதுடன் ஸலஃபுகளின் வழிமுறைகளைப் பின்பற்றுபவர்கள் என்று சேர்த்துக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த இடத்தில்தான் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று சொன்னவர்கள் எவருமே குர்ஆன் ஹதீசுக்கு எதிராக இருந்தாலும் அந்த முன்னோர்களைத் தான் தக்லீது செய்ய வேண்டும், குர்ஆன் ஹதீஸை விட்டு விட வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக பிந்தைய பித்அத் வாதிகளின் வழிமுறையை விட்டுவிட்டு முந்தைய நன்மக்களின் வழியில் குர்ஆன் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்று தான் சொன்னார்கள். இது தான் இன்று சில காரணங்களுக்காக திரித்து வியாக்கியானம் செய்யப்படுகிறது (யார்? என்ன காரணம் என்பது விளக்கப்படும்) 

அத்வைத வாதி இப்னு அரபிக்கு எதிராகக் கொள்கைப் பொருதிய ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, அவர்களின் மாணவர் இப்னுல் ஜவ்ஸி, சவூதி மண்ணிலிருந்து கப்ரு வழிபாடு ஒழியக் காரணமாக அமைந்த இமாம் இப்னு அப்துல் வஹ்ஹாப், இமாம் முஹம்மது இப்னு அப்துஹ், ஏன் சமீபத்தில் வாழ்ந்து மறைந்த மூத்த உலமாக்கள் இப்னு பாஸ், இப்னு உஃதைமீன், நாசிருத்தீன் அல்பானி, போன்ற சீர்திருத்தவாதிகளும் சரி இன்று உலகெங்கிலும் இஸ்லாமில் ஊடுருவிய ஷிர்க் பித்அத் அநாச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கியிருக்கும் அமைப்புகளும் சரி அவர்கள் தங்களை இந்த பெயரில்தான் அறிமுகம் செய்தனர். இதனை அவர்களது எழுத்திலிருந்தும் பேச்சிலிருந்தும் நாம் அறிகிறோம்.

 ஸலஃப்களைப் பின்பற்றுவது கூடுமா? கூடாதா? அத்தகைய பின்பற்றுதலின் வழிமுறைகள், வரைமுறைகள் என்னென்ன? இன்று ஸலஃப் மன்ஹஜைக் குறித்து அதனை வழிகேடு என்று சொல்லக் கூடியவர்கள் அவர்களைப் பின்பற்றாமல் இருக்கிறார்களா? இருக்க முடியுமா? அப்படியானால் அவர்கள் எதனைத் திரித்துக் கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன்னர்

அக்கீதாவுக்கு விளக்கம் என்ன? லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்! மட்டுமா? இல்லை, லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ், மன்ஹஜ் ஸலஃபா?   சுன்னாவையும் - குர்ஆனையும் தாண்டிய ஒன்றை அவர்கள் பின்பற்றினாலும் இல்லையென்றாலும் அவர்களை பின்பற்றவேண்டுமா? என்பது போன்ற கேள்விகள் தமிழகத்தில் சமீப காலமாகத் தான் சர்ச்சையில் இருந்து வருகின்றன என்பதையும், இந்தக் கேள்விகள் ஒரு தனி நபரின் அல்லது இயக்கத்தின் பிரச்சாரத்தின் அடிப்படையில்தான் எழுப்பப்படுகிறது என்ற உண்மையை சகோதரர்கள் ஆணித்தரமாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள். அதனால் என்ன? என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். என்னுடைய பதிவின் முடிவில் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு விளக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.